குன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்மறம்கெழு தானை அரச ருள்ளும்
அறம்கடைப் பிடித்த செங்கோ லுடன்அமர்
மறம்சாய்த்து எழுந்த வலன்உயர் திணிதோள்
பலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன் 5
அணங்குடை உயர்நிலைப் பொறுப்பின் கவாஅன்
'சினையொண் காந்தள் நாறும் நறுநுதல்
துணைஈர் ஓதி மாஅ யோள்வயின்
நுண்கோல் அவிர்தொடி வண்புறஞ் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும் என்றும் 10
வயவுஉறு நெஞ்சத்து உயவுத்துணை யாக
ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்
துன்னருந் துப்பின் வென்வேற் பொறையன்
அகலிருங் கானத்துக் கொல்லி போலத்
தவாஅ லியரே நட்பே அவள்வயின் 15
அறாஅ லியரே தூதே- பொறாஅர்
விண்பொரக் கழித்த திண்பிடி ஒள்வாள்
புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
தொகுபோர்ச் சோழன் பொருள்மலி பாக்கத்து
வழங்கல் ஆனாப் பெருந்துறை
முழங்குஇரு முந்நீர்த் திரையினும் பலவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework