தொடிஅணி முன்கைத் தொகுவிரல் குவைஇப்படிவ நெஞ்சமொடு பகல்துணை ஆக,
நோம்கொல்? அளியள் தானே!- தூங்குநிலை,
மரைஏறு சொறிந்த மாத்தட் கந்தின்
சுரைஇவர் பொதியில் அம்குடிச் சீறூர் 5
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை,
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒருதனி நெடுவீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய்மழை நனந்தலைக்,
கணைக்கால் அம்பிணை ஏறுபுறம் நக்க, 10
ஒல்குநிலை யாஅத்து ஓங்குசினை பயந்த
அல்குறு வரிநிழல் அசையினம் நோக்க,
அரம்புவந்து அலைக்கும் மாலை,
நிரம்பா நீள்இடை வருந்துதும் யாமே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework