ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்கோடை அவ்வளி குழலிசை ஆக,
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்இசைத்
தோடுஅமை முழவின் துதைகுரல் ஆகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரற் றூம்பொடு 5
மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ் ஆக
இன்பல் இமிழ்இசை கேட்டுக், கலிசிறந்து,
மந்தி நல்அவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து, இயலி ஆடுமயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்! 10
உருவவல் விற்பற்றி, அம்புதெரிந்து,
செருச்செய் யானை செல்நெறி வினாஅய்ப்,
புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை,
மலர்தார் மார்பன், நின்றோற் கண்டோ ர்
பலர்தில், வாழி - தோழி - அவருள், 15
ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
நீர்வார் கண்ணொடு, நெகிழ்தோ ளேனே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework