"அருள் அன்று ஆக ஆள்வினை, ஆடவர்பொருள்" என வலித்த பொருள்அல் காட்சியின்
மைந்துமலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரிசினம் தவழ்ந்த இருங்கடற்று அடைமுதல்
கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை, 5
அடுபுலி முன்பின், தொடுகழல் மறவர்
தொன்றுஇயல் சிறுகுடி மன்றுநிழற் படுக்கும்
அண்ணல் நெடுவரை, ஆம்அறப் புலர்ந்த
கல்நெறிப் படர்குவர் ஆயின் - நல்நுதல்,
செயிர்தீர் கொள்கை, சில்மொழி துவர்வாய், 10
அவிர்தொடிய முன்கை, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்றுபடு விறற்கவின் உள்ளி, என்றும்
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும், 15
தருநரும் உளரோ, இவ் உலகத் தான்?, என-
மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
அம்மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
பல்காசு நிரைத்த, கோடுஏந்து, அல்குல்;
மெல்இயல் குறுமகள்!- புலந்துபல கூறி 20
ஆனா நோலை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ ,
அரிதுபெறு சிறப்பின் நின்வயி னானே?"

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework