அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழிகாயாஞ் செம்மல் தாஅய், பலஉடன்
ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம்காட்டு ஆர்இடை, மடப்பிணை தழீஇத், 5
திரி மருப்பு இரலை புல்அருந்து உகள,
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்
பதவு மேயல் அருந்து மதவுநடை நல்ஆன்
வீங்குமாண் செருத்தல், தீம்பால் பிலிற்ற 10
கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின், காலை
யாங்கு ஆகுவம் கொல்? பாண!" என்ற
மனையோள் சொல்எதிர் சொல்லல் செல்லேன்,
செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக் 15
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து,
அவர்திறம் செல்வேன் கண்டனென், யானே-
விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்
கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக்
கார்மழை முழக்குஇசை கடுக்கும்,
முனைநல் ஊரன், புனைநெடுந் தேரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework