தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத்
தெறல் அருமரபின் கடவுட் பேணிக்
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் 5
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் -
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,
வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்- 10
பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்விது ஆயினும்- தெற்குஏர்பு,
கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்,
சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட 15
மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை,
கவவுஇன் புறாமைக் கழிக- வள வயல்,
அழல்நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்
நிரம்புஅகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப், 20
புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை,
இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த
வெண்குருகு நரல, வீசும்
நுண்பல் துவலைய தண்பனி நாளே!