எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்தாங்கு,
அறிவும், நம் அறிவு ஆய்ந்த அடக்கமும், நாணொடு,
வறிது ஆகப் பிறர் என்னை நகுபவும், நகுபு உடன்
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல், மெய் காட்டி -
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவித்
தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன் கொலோ?
மணிப் பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து யாத்து,
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும், இ·து ஒத்தன் -
எல்லீரும் கேட்டீமின் என்று.
படரும், பனை ஈன்ற மாவும் - சுடர் இழை
நல்கியாள் நல்கியவை;
பொறை என் வரைத்து அன்றிப் பூ நுதல் ஈத்த
நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற
உப்பு இயல் பாவை உறை உற்றது போல,
உக்கு விடும் என் உயிர்.
பூளை, பொல மலர் ஆவிரை - வேய் வென்ற
தோளாள் எமக்கு ஈத்த பூ;
உரிது என் வரைத்து அன்றி, ஒள் இழை தந்த
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி, எரி பரந்த
நெய்யுள் மெழுகின் நிலையாது, பைபயத்
தேயும் - அளித்து - என் உயிர்.
இளையாரும், ஏதிலவரும் - உளைய, யான்
உற்றது உசாவும் துணை.
என்று யான் பாடக் கேட்டு,
அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் -
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் - அன்புற்று
அடங்குஅரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம்
உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework