அரிதே தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
அரிதே தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே;
பலவே யாமம்; பையுளும் உடைய;
சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்;
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து,
எழில் எஞ்சு மயிலின் நடுங்கிச், சேக்கையின்
அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே.
மெல்லிய நெஞ்சு பையுள் கூரத், தம்
சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை
வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆய் இழை!
வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய்.
நகை முதல் ஆக, நட்பினுள் எழுந்த
தகைமையின் நலிதல் அல்லது, அவர் நம்மை
வகைமையின் எழுந்த தொல் முரண் முதல் ஆகப்,
பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆய் இழை!
பகைமையின் கடிது, அவர் தகைமையின் நலியும் நோய்.
'நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்துத், தம்
சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப்
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர்த்
தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆய் இழை!
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய்.
ஆங்கு -
அன்னர் காதலர் ஆக, அவர் நமக்கு
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின்,
யாங்கு ஆவது கொல்? - தோழி! எனையதூஉம்.
தாங்குதல் வலித்தன்று ஆயின்,
நீங்க அரிது உற்றஅன்று, அவர் உறீஇய நோயே.