ஊர்க் கால் நிவந்த பொதும்பருள் நீர்க் கால்,கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு,
கழும முடித்துக், கண் கூடு கூழை
சுவல் மிசைத் தாதொடு தாழ, அகல் மதி
தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து
ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவை கொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள் கொல்? வெறுப்பினால்
வேண்டு உருவம் கொண்டது ஓர் கூற்றம் கொல்? - ஆண்டார்,
கடிது, இவளைக் காவார் விடுதல்; கொடி இயல்,
பல் கலைச் சில் பூங் கலிங்கத்தள் - ஈங்கு இது ஓர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்!
இவளை சொல்லாடிக் காண்பேன், தகைத்து;
நல்லாய்! கேள்;
ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை எனத்,
தூது உண் அம் புறவு எனத், துதைந்த நின் எழில் நலம் -
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! - நின் கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ?
நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என,
முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தோள் -
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய்! - நின் கண்டார்க்கு,
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ? அறியாயோ?
முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை எனப்,
பெயல் துளி முகிழ் எனப், பெருத்த நின் இள முலை -
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! - நின் கண்டார்
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?
என ஆங்கு,
பேதுற்றாய்ப் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய்,
யாது ஒன்றும் வாய் வாளாது இறந்தீவாய்! கேள், இனி;
நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடை
போதர விட்ட நுமரும், தவறு இலர்;
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்குப்
'பறை அறைந்து அல்லது செல்லற்க' என்னா

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework