மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டுப்
போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை,
இன் நகை, இலங்கு எயிற்றுத், தேமொழித், துவர்ச் செவ்வாய்
நல் நுதால் நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி;
'நில்' என, நிறுத்தான்; நிறுத்தே வந்து.
நுதலும், முகனும், தோளும், கண்ணும்,
இயலும், சொல்லும், நோக்குபு நினைஇ,
'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று;
மை தீர்ந்தன்று, மதியும் அன்று;
வேய் அமன்றன்று, மலையும் அன்று;
பூ அமன்றன்று, சுனையும் அன்று;
மெல்ல இயலும், மயிலும் அன்று;
சொல்லத் தளரும், கிளியும் அன்று'
என ஆங்கு,
அனையன பல பாராட்டிப், பையென,
வலைவர் போலச் சோர் பதன் ஒற்றிப்,
புலையர் போலப் புன்கண் நோக்கித்,
தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்;
காழ் வரை நில்லாக் கடும் களிறு அன்னோன்
தொழூஉம்; தொடூஉம்; அவன் தன்மை
ஏழைத் தன்மையோ இல்லை, தோழி!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework