ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்,
நல்லார் கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
இல்லோர் புன்கண், ஈகையின் தணிக்க
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்;
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச்
சொல்லும் சொல், கேட்டீ - சுடர் இழாய்! பல் மாணும்;
'நின் இன்றி அமையலேன், யான்' என்னும் அவன் ஆயின்,
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின்,
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள கொல்லோ? - நறு நுதால்!
'அறியாய் நீ, வருந்துவல் யான்' என்னும் அவன் ஆயின்,
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின்,
அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்?
'வாழலேன், யான்' என்னும் 'நீ நீப்பின்' அவன் ஆயின்,
ஏழையர் எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின்,
சூழும்கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்;
சூழும்கால், நறு நுதால்! நம் உளே சூழ்குவம்.
அவனை,
நாண் அடப் பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது;
'பேணினர்' எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன்
'வௌவினன் முயங்கும் மாத்திரம் வா' எனக்
கூறுவென் போலக் காட்டி
மற்று அவன் மேஎவழி மேவாய் நெஞ்சே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework