வீ அகம் புலம்ப வேட்டம் போகியமாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த, வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
'வேங்கை அம் சினை' என விறல் புலி முற்றியும்
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்,
மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப -
கூடுதல் வேட்கையான், குறி பார்த்துக் குரல் நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக;
அரும் செலவு ஆர் இடை அருளி வந்து, அளி பெறாஅன்
வருந்தினென் என பல வாய்விடூஉம், தான் என்ப -
நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு தன் மாட்டுப்
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக;
கனை பெயல் நடுநாள் யான் கண் மாறக், குறி பெறாஅன்,
புனை இழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப -
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன்
அளி நசை ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக;
என ஆங்கு,
கலந்த நோய் கைம்மிகக் கண் படா என் வயின்
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை -
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச்
சிலம்பு போல், கூறுவ கூறும்
இலங்கு ஏர் எல் வளை, இவள் உடை நோயே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework