விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறைக்கடி சுனைக் கவினிய காந்தள் அம் குலையினை,
அரு மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்துப்,
பெரு மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைப் பெயல்
உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி,
நறு வீய நனம் சாரல் சிலம்பலின், கதுமெனச்,
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப!
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ -
புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி
பல் இதழ் மலர் உண் கண் பசப்ப! நீ சிதைத்ததை?
புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ -
கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாடச் சிதைத்ததை?
சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ -
யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி
காமரு நல் எழில் கவின் வாடச் சிதைத்ததை?
என ஆங்கு,
தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்
பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம்
உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework