பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும்,நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல்,
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண்
தோடு உறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெறச்,
செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு,
தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல்
வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான்;
விரிந்து ஆனா மலர் ஆயின், விளித்து ஆலும் குயில் ஆயின்,
பிரிந்து உள்ளார் அவர் ஆயின், பேதுறூஉம் பொழுது ஆயின்,
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது
வருந்த, நோய் மிகும் ஆயின் - வணங்கு இறை! அளி என்னோ?
புதலவை மலர் ஆயின், பொங்கர் இன வண்டு ஆயின்,
அயலதை அலர் ஆயின், அகன்று உள்ளார் அவர் ஆயின்,
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது,
நுதல் ஊரும் பசப்பு ஆயின் - நுணங்கு இறை! அளி என்னோ?
தோயின அறல் ஆயின், சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின்
மாவின தளிர் ஆயின், மறந்து உள்ளார் அவர் ஆயின்,
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது
பாயல் நோய் மிகும் ஆயின் - பைந் தொடி அளி என்னோ?
என ஆங்கு,
ஆய் இழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும்
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்,
பரிந்து எவன் செய்தி - வருகுவர் விரைந்தே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework