ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகியதீது இலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்தப்,
பேதுறு மட மொழிப், பிணை எழில் மான் நோக்கின்,
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்பக்
காதலர்ப் புணர்ந்தவர் கதுப்பு போல், கழல்குபு
தாதொடும் தளிரொடும், தண் அறல் தகைபெறப்,
பேதையோன் வினை வாங்கப்ப் பீடு இலா அரசன் நாட்டு,
ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில்;
நிலம் பூத்த மர மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள,
நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க;
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்யப்
புலம் பூத்துப் புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார் கொல்?
கல் மிசை மயில் ஆலக், கறங்கி ஊர் அலர் தூற்றத்
தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க;
ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற,
வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார் கொல்?
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ளப்,
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க;
தைஇய மகளிர்தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார் கொல்?
என ஆங்கு,
நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி!
'நாம் இல்லாப் புலம்பு ஆயின், நடுக்கம் செய் பொழுது ஆயின்,
காமவேள் விழவு ஆயின், கலங்குவள் பெரிது' என
ஏமுறு கடும் திண் தேர் கடவ,
நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே.