ஒரு குழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும்,பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,
மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,
ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,
ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்குத்
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப்,
போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற,
நோதக வந்தன்றால், இளவேனில் மேதக;
பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்துத்,
தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்!
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,
வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர்;
திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை,
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்!
நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கித், தம்
இசை பரந்து உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர்;
அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறு ஆகித்,
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்!
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு, உலையாது காத்து ஓம்பி,
ஆறு இன்றிப் பொருள் வெ·கி அகன்ற நாட்டு உறைபவர்;
என நீ,
தெருமரல் வாழி, தோழி! நம் காதலர்
பொரு முரண் யானையர், போர் மலைந்து எழுந்தவர்,
செரு மேம்பட்ட வென்றியர்,
'வரும்' என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework