வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்றமுகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக்,
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா,
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,
ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல,
எழு உறழ் தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம்,
அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்துத் தம்
குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ்சுரம்
இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்;
மணக்கும்கால், மலர் அன்ன தகையவாய்ச், சிறிது நீர்
தணக்கும்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ?
சிறப்புச் செய்து, உழையராப், புகழ்பு ஏத்தி, மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்;
ஈங்கு நீர் அளிக்கும்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர்
நீங்கும்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ?
செல்வத்துள் சேர்ந்து அவர் வளன் உண்டு, மற்று அவர்
ஒல்கு இடத்து உலப்பு இலா உணர்வு இலார் தொடர்பு போல்;
ஒரு நாள் நீர் அளிக்கும்கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர்
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ?
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்;
என ஆங்கு,
யாம் நின் கூறுவது எவன் உண்டு? எம்மினும்
நீ நற்கு அறிந்தனை, நெடுந்தகை! - வானம்
துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் - நின்
அளி மாறு பொழுதின், இவ் ஆய் இழை கவினே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework