நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும், தாம்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும், தாம்அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும்', என்னும் சொல் -
இன் தீம் கிளவியாய்! - வாய் மன்ற; நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட, யானும்,
'இது ஒன்று உடைத்து' என எண்ணி, அது தேர,
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்,
பாயல் கொண்டு என் தோள் கனவுவார்; ஆய் கோல்,
தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்,
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள் கொல்லோ?
'இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும்
நெடு மலை வெஞ்சுரம் போக' என்றார், ஆய் இழாய்!
தாம் இடை கொண்டது அது ஆயின், தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின்,
'தொய்யில் துறந்தார் அவர்' என தம் வயின்,
நொய்யார் நுவலும் பழி நிற்பத் தம்மொடு
போயின்று, சொல், என் உயிர்.