அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' எனப்
பிரிவு எண்ணிப் பொருள் வயின் சென்ற நம் காதலர்
வருவர்கொல், வயங்கு இழாஅய்! வலிப்பல், யான்; கேஎள் இனி:
'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே, கனம் குழாஅய்! காடு' -என்றார்; அக்காட்டுள்,
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின் நீரைப்
பிடி ஊட்டிப், பின் உண்ணும் களிறு, எனவும், உரைத்தனரே;
'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,
துன்புறூஉம் தகையவே காடு' -என்றார்; அக்காட்டுள்,
அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும் புறவு, எனவும், உரைத்தனரே;
'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,
துன்னரூஉம் தகையவே காடு' - என்றார்; அக்காட்டுள்,
இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை, எனவும், உரைத்தனரே.
என ஆங்கு,
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனை வயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல்எழில் உண் கண்ணும் ஆடுமால், இடனே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework