இடு முள் நெடு வேலி போலக் கொலைவர்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
இடு முள் நெடு வேலி போலக் கொலைவர்கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடு நவை ஆர் ஆற்று, அறு சுனை முற்றி,
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடும் தாம் பதிபு, ஆங்கு கை தெறப்பட்டு,
வெறி நிரை வேறு ஆகச் சார்ச் சாரல் ஓடி,
நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் -
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும்
நறு நுதல் நீத்துப் பொருள் வயின் செல்வோய்!
உரன் உடை உள்ளத்தை, செய் பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்!
இளமையும் காமமும் நின் பாணி நில்லா -
இடை முலைக் கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை -
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை;
போற்றாய் - பெரும! நீ; காமம் புகர்பட
வேற்றுமைக் கொண்டு, பொருள் வயின் போகுவாய்,
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி.