நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக்கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டிக் காய்சினம் தெறுதலின்,
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய, எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்ற, நிலம் சேர,
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்,
சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு, ஒரு பொருள்
சொல்லுவது உடையேன், கேள்மின், மற்று ஐஇய!
வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல்
ஏழும், தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம்
யாழினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது,
பிரியும்கால் பிறர் எள்ளப், பீடு இன்றி புறம் மாறும்
திருவினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை
வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும்
அரைசினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
என ஆங்கு,
நச்சல் கூடாது பெரும இச்செலவு
ஒழிதல் வேண்டுவல், சூழின் பழி இன்று;
மன்னவன் புறந்தர, வரு விருந்து ஓம்பித்,
தன் நகர் விழையக் கூடின்,
இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework