வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறுவான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று
உசாவுகோ - ஐய! சிறிது;
நீயே, செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து, யாழ நின்
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே;
இவட்கே, செய்வுறு மண்டிலம் மையாப்பது போல்,
மை இல் வாள் முகம் பசப்பு ஊருமே;
நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டிப்
புனை மாண் மரீஇய அம்பு தெரிதீயே;
இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்,
இனை நோக்கு உண் கண் நீர் நில்லாவே;
நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள் வயின் செலீஇய
வலம் படு திகிரி வாய் நீவுதியே;
இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல்
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே;
என நின்,
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்,
தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள்
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ -
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?