வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்டஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்றப், பகல் அல்கிக், கங்குலான்,
வீங்கு இறை வடுக் கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்
தேம் கமழ் கதுப்பின் உள் அரும்பு அவிழ் நறு முல்லைப்
பாய்ந்து ஊதிப் படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய
பூம் பொய்கை மறந்து உள்ளாப் புனல் அணி நல் ஊர!
அணை மென் தோள் யாம் வாட, அமர் துணை புணர்ந்து நீ,
'மண மனையாய்!' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ -
பொதுக் கொண்ட கவ்வையுள் பூ அணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை;
கனலும் நோய்த் தலையும், 'நீ கனம் குழை அவரொடு
புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ -
தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின்
ஈர் அணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை;
தணந்ததன் தலையும், 'நீ தளர் இயல் அவரொடு
துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ -
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின்
களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை;
என ஆங்கு,
அளி பெற்றேம், எம்மை நீ அருளினை; விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடும் திண் தேர்,
பூட்டு விடாஅ நிறுத்து.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework