வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே. 15

Add a comment

எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 1
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. 2
அவற்றுள்,
அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. 3
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. 4
மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 5
நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 6
கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 7
ஔகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப.8
னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப. 9
மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா. 10
மெய்யின் அளபே அரை என மொழிப. 11
அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. 12
அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியும் காலை. 13
உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 14
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். 15
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. 16
புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்
ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. 17
மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. 18
வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. 19
மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. 20
இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. 21
அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்
மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. 22
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்
க ச ப என்னும் மூ எழுத்து உரிய. 23
அவற்றுள்,
ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். 24
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 25
அவற்றுள்,
ண னஃகான் முன்னர்
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய. 26
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. 27
மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். 28
ய ர ழ என்னும் புள்ளி முன்னர்
முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். 29
மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே. 30
அ இ உ அம் மூன்றும் சுட்டு. 31
ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. 32
அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர். 33

Add a comment

உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும் காலை
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்படத் தெரியும் காட்சியான. 1
அவ் வழி,
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 2
அவற்றுள்,
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும். 3
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன
அவைதாம்,
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. 4
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5
தம்தம் திரிபே சிறிய என்ப. 6
ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7
சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8
டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9
அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10
அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11
அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12
நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13
நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14
இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15
பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16
அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17
மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்
மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18
சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20
அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21

Add a comment

குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்
யா என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே. 1
புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். 2
நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே. 3
இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே
கடப்பாடு அறிந்த புணரியலான. 4
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே. 5
ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். 6
உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலையான. 7
குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே. 8
ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு
இகர உகரம் இசை நிறைவு ஆகும். 9
நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி. 10
குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே. 11
ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே. 12
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். 13
தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந் நிலை மயக்கம் மானம் இல்லை. 14
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும். 15
அவற்றுள்,
ரகார ழகாரம் குற்றொற்று ஆகா. 16
குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின்
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல. 17
செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும். 18
னகாரை முன்னர் மகாரம் குறுகும். 19
மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும்
எழுத்து இயல் திரியா என்மனார் புலவர். 20
அகர இகரம் ஐகாரம் ஆகும். 21
அகர உகரம் ஔகாரம் ஆகும். 22
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும். 23
ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே
தேரும் காலை மொழிவயினான. 24
இகர யகரம் இறுதி விரவும். 25
பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும். 26
உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா. 27
க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. 28
சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே
அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே. 29
உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்
வ என் எழுத்தொடு வருதல் இல்லை. 30
ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. 31
ஆவொடு அல்லது யகரம் முதலாது. 32
முதலா ஏன தம் பெயர் முதலும். 33
குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். 34
முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது
அப் பெயர் மருங்கின் நிலையியலான. 35
உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும். 36
க வவொடு இயையின் ஔவும் ஆகும். 37
எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. 38
ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. 39
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. 40
உ ஊகாரம் ந வவொடு நவிலா. 41
உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே. 42
உப் பகாரம் ஒன்று என மொழிப
இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. 43
எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. 44
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்
அப் பதினொன்றே புள்ளி இறுதி. 45
உச் சகாரமொடு நகாரம் சிவணும். 46
உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே
அப் பொருள் இரட்டாது இவணையான. 47
வகரக் கிளவி நான் மொழி ஈற்றது. 48
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. 49

Add a comment

மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின்
இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருபஃது
அறு நான்கு ஈறொடு நெறி நின்று இயலும்
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
மெய்யே உயிர் என்று ஆயீர் இயல. 1
அவற்றுள்,
மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு-நிலையல். 2
குற்றியலுகரமும் அற்று என மொழிப. 3
உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே. 4
உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்
மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று
இவ் என அறியக் கிளக்கும் காலை
நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று
ஆயீர் இயல புணர் நிலைச் சுட்டே. 5
அவற்றுள்,
நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு
குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பு என
ஆங்கு அந் நான்கே மொழி புணர் இயல்பே. 6
அவைதாம்,
மெய் பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று
இவ் என மொழிப திரியும் ஆறே. 7
நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும்
அடையொடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய. 8
மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
உரியவை உளவே புணர் நிலைச் சுட்டே. 9
வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்
வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும்
எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்
ஒழுக்கல் வலிய புணரும் காலை. 10
ஐ ஒடு கு இன் அது கண் என்னும்
அவ் ஆறு என்ப வேற்றுமை உருபே. 11
வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு
ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும். 12
ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈறு ஆகு அகர முனைக் கெடுதல் வேண்டும். 13
வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே. 14
உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயர் என்று
ஆயிரண்டு என்ப பெயர் நிலைச் சுட்டே. 15
அவற்று வழி மருங்கின் சாரியை வருமே. 16
அவைதாம்,
இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன் என் கிளவி உளப்பட பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே. 17
அவற்றுள்,
இன்னின் இகரம் ஆவின் இறுதி
முன்னர்க் கெடுதல் உரித்தும் ஆகும். 18
அளபு ஆகு மொழி முதல் நிலைஇய உயிர்மிசை
னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே. 19
வஃகான் மெய் கெட சுட்டு முதல் ஐம் முன்
அஃகான் நிற்றல் ஆகிய பண்பே. 20
னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு. 21
ஆனின் னகரமும் அதன் ஓரற்றே
நாள் முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே. 22
அத்தின் அகரம் அகர முனை இல்லை. 23
இக்கின் இகரம் இகர முனை அற்றே. 24
ஐயின் முன்னரும் அவ் இயல் நிலையும். 25
எப் பெயர் முன்னரும் வல்லெழுத்து வரு வழி
அக்கின் இறுதி மெய்ம் மிசையொடும் கெடுமே
குற்றியலுகரம் முற்றத் தோன்றாது. 26
அம்மின் இறுதி க ச தக் காலை
தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும். 27
மென்மையும் இடைமையும் வரூஉம் காலை
இன்மை வேண்டும் என்மனார் புலவர். 28
இன் என வரூஉம் வேற்றுமை உருபிற்கு
இன் என் சாரியை இன்மை வேண்டும். 29
பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப
வேற்றுமை உருபு நிலைபெறு வழியும்
தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும்
ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி
சொற் சிதர் மருங்கின் வழி வந்து விளங்காது
இடை நின்று இயலும் சாரியை இயற்கை
உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும். 30
அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்
ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்றே
அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. 31
காரமும் கரமும் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை. 32
அவற்றுள்,
கரமும் கானும் நெட்டெழுத்து இலவே. 33
வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய. 34
ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும். 35
புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது
மெய்யொடும் சிவணும் அவ் இயல் கெடுத்தே. 36
மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும். 37
எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே
உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். 38
எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி
இசையின் திரிதல் நிலைஇய பண்பே. 39
அவைதாம்,
முன்னப் பொருள புணர்ச்சிவாயின்
இன்ன என்னும் எழுத்துக் கடன் இலவே. 40

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework