அ ஆ உ ஊ ஏ ஔ என்னும்
அப் பால் ஆறன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை. 1
பல்லவை நுதலிய அகர இறு பெயர்
வற்றொடு சிவணல் எச்சம் இன்றே. 2
யா என் வினாவும் ஆயியல் திரியாது. 3
சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி
ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே. 4
சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி
வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே. 5
யா என் வினாவின் ஐ என் இறுதியும்
ஆயியல் திரியாது என்மனார் புலவர்
ஆவயின் வகரம் ஐயொடும் கெடுமே. 6
நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும்
ஆவயின் னகரம் ஒற்று ஆகும்மே. 7
ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை. 8
அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு
அத்தொடும் சிவணும் ஏழன் உருபே. 9
ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை. 10
சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும்
கெட்ட இறுதி இயல் திரிபு இன்றே. 11
ஏனை வகரம் இன்னொடு சிவணும். 12
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை. 13
இன் இடை வரூஉம் மொழியுமார் உளவே. 14
நூம் என் இறுதி இயற்கை ஆகும். 15
தாம் நாம் என்னும் மகர இறுதியும்
யாம் என் இறுதியும் அதன் ஓரன்ன
ஆ எ ஆகும் யாம் என் இறுதி
ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும்
ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும். 16
எல்லாம் என்னும் இறுதி முன்னர்
வற்று என் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையும் இறுதியான. 17
உயர்திணை ஆயின் நம் இடை வருமே. 18
எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்
எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்
ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையும் இறுதியான
தம் இடை வரூஉம் படர்க்கை மேன
நும் இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே. 19
தான் யான் என்னும் ஆயீர் இறுதியும்
மேல் முப் பெயரொடும் வேறுபாடு இலவே. 20
அழனே புழனே ஆயிரு மொழிக்கும்
அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
ஒத்தது என்ப உணருமோரே. 21
அன் என் சாரியை ஏழன் இறுதி
முன்னர்த் தோன்றும் இயற்கைத்து என்ப. 22
குற்றியலுகரத்து இறுதி முன்னர்
முற்றத் தோன்றும் இன் என் சாரியை. 23
நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும்
அப் பால் மொழிகள் அல் வழியான. 24
அவைதாம்,
இயற்கைய ஆகும் செயற்கைய என்ப. 25
எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். 26
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லும் காலை
ஆன் இடை வரினும் மானம் இல்லை
அஃது என் கிளவி ஆவயின் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. 27
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய
ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும்
ஆய்தம் கெடுதல் ஆவயினான. 28
ஏழன் உருபிற்குத் திசைப் பெயர் முன்னர்
சாரியைக் கிளவி இயற்கையும் ஆகும்
ஆவயின் இறுதி மெய்யொடும் கெடுமே. 29
புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்
சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்
தேரும் காலை உருபொடு சிவணி
சாரியை நிலையும் கடப்பாடு இலவே. 30

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework