எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 1
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. 2
அவற்றுள்,
அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. 3
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. 4
மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 5
நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 6
கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 7
ஔகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப.8
னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப. 9
மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா. 10
மெய்யின் அளபே அரை என மொழிப. 11
அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. 12
அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியும் காலை. 13
உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 14
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். 15
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. 16
புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்
ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. 17
மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. 18
வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. 19
மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. 20
இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. 21
அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்
மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. 22
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்
க ச ப என்னும் மூ எழுத்து உரிய. 23
அவற்றுள்,
ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். 24
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 25
அவற்றுள்,
ண னஃகான் முன்னர்
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய. 26
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. 27
மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். 28
ய ர ழ என்னும் புள்ளி முன்னர்
முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். 29
மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே. 30
அ இ உ அம் மூன்றும் சுட்டு. 31
ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. 32
அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர். 33

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework