குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்
யா என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே. 1
புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். 2
நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே. 3
இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே
கடப்பாடு அறிந்த புணரியலான. 4
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே. 5
ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். 6
உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலையான. 7
குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே. 8
ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு
இகர உகரம் இசை நிறைவு ஆகும். 9
நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி. 10
குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே. 11
ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே. 12
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். 13
தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந் நிலை மயக்கம் மானம் இல்லை. 14
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும். 15
அவற்றுள்,
ரகார ழகாரம் குற்றொற்று ஆகா. 16
குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின்
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல. 17
செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும். 18
னகாரை முன்னர் மகாரம் குறுகும். 19
மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும்
எழுத்து இயல் திரியா என்மனார் புலவர். 20
அகர இகரம் ஐகாரம் ஆகும். 21
அகர உகரம் ஔகாரம் ஆகும். 22
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும். 23
ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே
தேரும் காலை மொழிவயினான. 24
இகர யகரம் இறுதி விரவும். 25
பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும். 26
உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா. 27
க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. 28
சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே
அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே. 29
உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்
வ என் எழுத்தொடு வருதல் இல்லை. 30
ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. 31
ஆவொடு அல்லது யகரம் முதலாது. 32
முதலா ஏன தம் பெயர் முதலும். 33
குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். 34
முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது
அப் பெயர் மருங்கின் நிலையியலான. 35
உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும். 36
க வவொடு இயையின் ஔவும் ஆகும். 37
எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. 38
ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. 39
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. 40
உ ஊகாரம் ந வவொடு நவிலா. 41
உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே. 42
உப் பகாரம் ஒன்று என மொழிப
இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. 43
எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. 44
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்
அப் பதினொன்றே புள்ளி இறுதி. 45
உச் சகாரமொடு நகாரம் சிவணும். 46
உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே
அப் பொருள் இரட்டாது இவணையான. 47
வகரக் கிளவி நான் மொழி ஈற்றது. 48
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. 49

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework