புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.

பாடியவர்: கழாத்தலையார்.
திணை, துறை. தெரிந்தில.

ஈரச் செவ்வி உதவின ஆயினும்,
பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி,
வீறுவீறு ஆயும் உழவன் போலப்,
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
மூதி லாளர் உள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை,
‘இவற்கு ஈக !’ என்னும்; அதுவும்அன் றிசினே;
கேட்டியோ வாழி_பாண! பாசறைப்,
‘பூக்கோள் இன்று’ என்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?

Add a comment

பாடியவர்: ஔவையார்
திணை: கரந்தை துறை: குடிநிலையுரைத்தல்

இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை_இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே:
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன்_ பெரும ! நிற் குறித்துவரு வேலே.

Add a comment

பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்
திணை: வஞ்சி துறை: பெருஞ்சோற்று நிலை

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி,
வாய்வாள் பற்றி நின்றனென்’ என்று,
சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்!
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்,
‘என்முறை வருக’ என்னான், கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி,
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

Add a comment

பாடியவர்: நெடுங்கழுத்துப் பரணர்
திணை: கரந்தை துறை: வேத்தியல்

சிறாஅஅர் ! துடியர்! பாடுவல் மகாஅஅர்;
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்,
விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்;
என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை!
மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!

Add a comment

பாடியவர்: நொச்சி நியமங்கிழார்
திணை: காஞ்சி துறை: பூக்கோட் காஞ்சி

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework