கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்தி
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்திவேறுபுலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய
முதைச்சுவற் கலித்த ஈர்இலை நெடுந்தோட்டுக்
கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி 5
கவட்டடிப் பொருத பல்சினை உதிர்வை
அகன்கண் பாறைச் செவ்வயின் தெறீஇ
வரியணி பணைத்தோள் வார்செவித் தன்னையர்
பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்பச்
சுழல்மரம் சொலித்த சுளகுஅலை வெண்காழ் 10
தொடிமாண் உலக்கை ஊழின் போக்கி
உரல்முகம் காட்டிய சுரைநிறை கொள்ளை
ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக்
களிபடு குழிசிக் கல்லடுப்பு ஏற்றி
இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற் 15
குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப் புன்கம்
மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும்
நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன்தூங்கு உயர்வரை நல்நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டவர் 20
நீடலர்- வாழி தோழி!- தோடுகொள்
உருகெழு மஞ்ஞை ஒலிசீர் ஏய்ப்பத்
தகரம் மண்ணிய தண்ணறு முச்சிப்
புகரில் குவளைப் போதொடு தெரிஇதழ்
வேனில் அதிரல் வேய்ந்தநின் ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்தே