அம்ம!- வாழி தோழி!- நம்மலை
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
அம்ம!- வாழி தோழி!- நம்மலைஅமையறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்
நறுவிரை ஆரம் அறவெறிந்து உழுத
உளைக்குரல் சிறுதினை கவர்தலின் கிளையமல்
பெருவரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி 5
ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளிணர் நறுவீ
வேங்கையம் கவட்டிடை நிவந்த இதணத்துப்
பொன்மருள் நறுந்தாது ஊதும் தும்பி
இன்னிசை ஓரா இருந்தன மாக
'மையீர் ஓதி மடநல் லீரே! 10
நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர்மருப்பு ஒருத்தல்நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று' என
சினவுக்கொள் ஞமலி செயிர்த்துப்புடை ஆடச்
சொல்லிக் கழிந்த வல்விற் காளை 15
சாந்தார் அகலமும் தகையும் மிகநயந்து
ஈங்குநாம் உழக்கும் எவ்வம் உணராள்
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
'எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய் 20
தணிமருந்து அறிவல்' என்னும் ஆயின்
வினவின் எவனோ மற்றே- கனல்சின
மையல் வேழம் மெய்யுளம் போக
ஊட்டி யன்ன ஊன்புரள் அம்பொடு
காட்டுமான் அடிவழி ஒற்றி
வேட்டம் செல்லுமோ நும்மிறை? எனவே