பல்பூந் தண்பொழில் பகல்உடன் கழிப்பிஒருகால் ஊர்திப் பருதிஅம் செல்வன்
குடவயின் மாமலை மறையக் கொடுங்கழித்
தண்சேற்று அடைஇய கணைக்கால் நெய்தல்
நுண்தாது உண்டு வண்டினம் துறப்ப 5
வெருவரு கடுந்திறல் இருபெரும் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடலணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்றிவள்
பெரும்புலம் பினளே தெய்ய அதனால் 10
பாணி பிழையா மாண்வினைக் கலிமா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி
நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக்
குன்றுஇழி களிற்றின் குவவுமணல் நந்தி
இரவின் வம்மோ- உரவுநீர்ச் சேர்ப்ப!- 15
இனமீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றில் பொன்னென
நன்மலர் நறுவீ தாஅம்
புன்னை நறும்பொழில் செய்தநம் குறியே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework