இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்அருள்நன்கு உடையர் ஆயினும், ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென் மன்னே யானைதன்
கொன்மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து 5
இன்னா வேனில் இன்றுணை ஆர
முளிசினை மராஅத்துக் பொளிபிளந்து ஊட்ட
புலம்புவீற் றிருந்த நிலம்பகு- வெஞ்சுரம்
அரிய அல்லமன் நமக்கே- விரிதார்
ஆடுகொள் முரசின் அடுபோர்ச் செழியன் 10
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ
நீடுவெயில் உழந்த குறியிறைக் கணைக்கால்
தொடைஅமை பன்மலர்த் தோடு பொதிந்து யாத்த
குடைஓ ரன்ன கோள்அமை எருத்திற்
பாளை பற்றிழிந்து ஒழியப் புறம் சேர்பு 15
வாள்வடித் தன்ன வயிறுடைப் பொதிய
நாளுறத் தோன்றிய நயவரு வனப்பின்
ஆரத்து அன்ன அணிகிளர் புதுப்பூ
வாருறு கவரியின் வண்டுண விரிய
முத்தின் அன்ன வெள்வீ தாஅய் 20
அலகின் அன்ன அரிநிறத்து ஆலி
நகைநனி வளர்க்குஞ் சிறப்பின் தகைமிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினும் இனிய ஆகிக் கூர்எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ்வாய்
ஒண்தொடிக் குறுமகட் கொண்டனம் செலினே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework