பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்சிறுபுன் பெடையொடு சேண்புலம் போகி,
அரிமணல் இயவில் பரல்தேர்ந்து உண்டு,
வரிமரல் வாடிய வறன்நீங்கு நனந்தலைக்
குறும்பொறை மருங்கின் கோட்சுரம் நீந்தி, 5
நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
பல்காய் அஞ்சினை அகவும் அத்தம்
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்றுதரும்
நிலைஅரும் பொருட்பிணி நினைந்தனிர் எனினே, 10
வல்வதாக, நும் செய்வினை! இவட்கே,
களிமலி கள்ளின் நல்தேர் அவியன்
ஆடியல் இளமழை சூடித் தோன்றும்
பழம்தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
கண்ணிடை புரையும் நெடுமென் பணைத்தோள், 15
திருந்துகோல் ஆய்தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ , பிரிந்துறை நாட்டே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework