புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீநுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப,
அரவுஎயிற்று அன்ன அரும்புமுதிர் குரவின்
தேன்இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக்,
குயில்குரல் கற்ற வேனிலும் துயில்துறந்து 5
இன்னா கழியும் கங்குல்' என்றுநின்
நல்மா மேனி அணிநலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின்- ஆயிழை! கனைதிறல்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை
மென்தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு, 10
இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளைகழை பிழிந்த அம்தீஞ் சேற்றொடு,
பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல்பொரு புதவின்; உறந்தை எய்தினும்,
வினைபொரு ளாகத் தவிரலர்- கடைசிவந்து 15
ஐய அமர்த்த உண்கண்நின்
வைஏர் வால்எயிறு ஊறிய நீரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework