அன்பும் மடனும், சாயலும், இயல்பும்,என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளைப்,
புதலிவர் ஆடுஅமைத் தும்பி குயின்ற 5
அகலா அந்துளை கோடை முகத்தலின்
நீர்க்கியங்கு இனநிரைப் பின்றை, வார்கோல்
ஆய்க்குழல் பாணியின் ஐதுவந்து இசைக்கும்,
தேக்கமல் சோலைக் கடறேங்கு அருஞ்சுரத்து,
யாத்த தூணித் தலைதிறந் தவைபோல், 10
பூத்த இருப்பைக் குழைபொதி குவிஇணர்
கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர,
மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொல்லோ- நெஞ்சே!- பூப்புனை
புயலென ஒலிவரும் தாழிருங் கூந்தல், 15
செறிதொடி முன்கை நம் காதலி
அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework