கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறுமுளைதருபு ஊட்டி, வேண்டுகுளகு அருத்த,
வாள்நிற உருவின் ஒளிறுபு மின்னி,
பரூஉஉறைப் பல்துளி சிதறி, வான் நாவின்று,
பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப் 5
புயலேறு உறைஇய வியலிருள் நடுநாள்,
விறலிழைப் பொலிந்த காண்பின் சாயல்,
தடைஇத் திரண்டநின் தோள்சேர்பு அல்லதை
படாஅ வாகும், எம் கண் என, நீயும்
இருள்மயங்கு யாமத்து இயவுக்கெட விலங்கி, 10
வரிவயங்கு இரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெருமலை விடரகம் வர அரிது; என்னாய்,
வரவெளி தாக எண்ணுதி, அதனால்,
நுண்ணிதின் கூட்டிய படுமாண் ஆரம்
தண்ணிது கமழும்நின் மார்பு, ஒருநாள் 15
அடைய முயங்கேம் ஆயின், யாமும்
விறலிழை நெகிழச் சாஅய்தும்; அதுவே
அன்னை அறியினும் அறிக! அலர்வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
வண்டிறை கொண்ட எரிமருள் தோன்றியொடு. 20
ஒண்பூ வேங்கை கமழும்
தண்பெருஞ் சாரல் பகல்வந் தீமே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework