கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின்நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்
கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால்,
களிற்றுச்செவி அன்ன பாசடை மருங்கில்,
கழுநிவந் தன்ன கொழுமுகை இடைஇடை 5
முறுவல் முகத்தின் பன்மலர் தயங்கப்,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்புநனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு
இரைதேர் வெண்குருகு அஞ்சி, அயலது
ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல் 10
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
நீர்மலி மண்அளைச் செறியும் ஊர!
மனைநகு வயலை மரன்இவர் கொழுங்கொடி
அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
விழவுஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, 15
மலர்ஏர் உண்கண் மாண்இழை முன்கைக்
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலும், நின் காதலி?' எம்போல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
நெல்லுடை நெடுநகர் நின்னின்று உறைய, 20
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல்ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு,
கூர்நுனை மழுகிய எயிற்றள்
ஊர்முழுது நுவலும்நிற் காணிய சென்மே