அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்தகேளிர் கேடுபல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறுநுதல்
மைஈர் ஓதி ! அரும்படர் உழத்தல் 5
சிலநாள் தாங்கல் வேண்டும்' என்று, நின்
நல்மாண் எல்வளை திருத்தினர் ஆயின்,
வருவர் - வாழி, தோழி !- பலபுரி
வார்கயிற்று ஒழுகை நோன்சுவற் கொளீஇ,
பகடுதுறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ, 10
உழைமான் அம்பிணை இனன்இரிந்து ஓடக்,
காடுகவின் அழிய உறைஇக், கோடை
நின்றுதின விளிந்த அம்புணை, நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்குஉறழ் தோன்றல, பழங்குழித் தாஅம் 15
இன்களி நறவின் இயல்தேர் நன்னன்
விண்பொரு நெடுவரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலைஇறந் தோரே. 18
'இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து,
ஒருபடை கொண்டு, வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' எனப்,
பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வேம் ஆதல் அறியாள், முல்லை 5
நேர்கால் முதுகொடி குழைப்ப, நீர் சொரிந்து,
காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்குஆ குவள் கொல் தானே - வேங்கை 10
ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள,
ஆகத்து அரும்பிய மாசுஅறு சுணங்கினள்,
நன்மணல் வியலிடை நடந்த
சின்மெல் ஒதுக்கின், மாஅ யோளே?