உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்பெயல்ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்பப்,
பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள்,
வரைஇழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, 5
மிடைஊர்பு இழியக்கண்டனென், இவள் என
அலையல் - வாழிவேண்டு அன்னை!- நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் 10
கனவாண்டு மருட்டலும் உண்டே: இவள்தான்
சுடரின்று தமியளும் பனிக்கும்: வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்
நெஞ்சழிந்து அரணஞ் சேரும்: அதன்தலைப்
புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு, 15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவளிது செயலே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework