மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறுவரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக், 5
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்,
படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை, 10
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி, 15
மழைபட் டன்ன மணன்மலி பந்தர்,
இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
'உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப், 20
பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர்
உறுவளி ஆற்றச் சிறுவரை திற' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப,
மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென 25
நாணினள் இறைஞ்சி யோளே- பேணிப்
பரூஉப்பகை ஆம்பற் குரூஉத்தொடை நீவிச்
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework