கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
கூனல் எண்கின் குறுநடைத் தொழுதிசிதலை செய்த செந்நிலைப் புற்றின்
மண்புனை நெடுங்கோடு உடைய வாங்கி,
இரைநசைப் பரிக்கும் அரைநாட் கங்குல்
ஈன்றுஅணி வயவுப்பிணப் பசித்தென மறப்புலி 5
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஅட்டுக் குழுமும்
பனிஇருஞ் சோலை எமியம் என்னாய்
தீங்குசெய் தனையே, ஈங்குவந் தோயே;
நாள்இடைப் படின், என் தோழி வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; 10
கழியக் காதலர் ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ?- வான்தோய் வெற்ப!-
கணக்கலை இகுக்கும் கறிஇவர் சிலம்பின்
மணப்புஅருங் காமம் புணர்ந்தமை அறியார், 15
தொன்றுஇயல் மரபின் மன்றல் அயரப்
பெண்கோள் ஒழுக்கம் கண்கொள் நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புதுநாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே!