உன்னங் கொள்கையொடு உளம்கரந்து உறையும்அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
ஈரம்சேரா இயல்பிற் பொய்ம் மொழிச்
சேரிஅம் பெண்டிர் சௌவையும் ஒழிகம்;
நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற் 5
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவஇனி - வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே - மலைதொறும்
மால்கழை பிசைந்த கால்வாய் கூர்எரி, 10
மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்,
வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
கல்ஊர்பு இழிதரும் புல்சாய் சிறுநெறிக், 15
காடுமீக் கூறும் கோடுஏந்து ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம், 'பணைத்தோள்,
நாறுஐங் கூந்தல், கொம்மை வரிமுலை,
நிரைஇதழ் உண்கண், மகளிர்க்கு
அரியவால்' என அழுங்கிய செலவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework