நகை ஆகின்றே - தோழி! - நெருநல்-மணிகண் டன்ன துணிகயம் துளங்க,
இரும்புஇயன் றன்ன கருங்கோட்டு எருமை,
ஆம்பல் மெல்லடை கிழியக், குவளைக்
கூம்புவிடு பன்மலர் மாந்திக், கரைய 5
காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண்துறை ஊரன் திண்தார் அகலம்
வதுவை நாள்அணிப் புதுவோர்ப் புணரிய,
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் 10
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்இட்டு,
எம்மனைப் புகுதந் தோனே; அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென், எதிர்சென்று,
'இம்மனை அன்று; அஃது உம்மனை' என்ற
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework