வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன்பெருங் குன்றத்து,
நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு
ஆள்இல் அத்தத்து உழுவை உகளும் 5
காடு இறந்தனரே, காதலர்; மாமை,
அரிநுண் பசலை பாஅய, பீரத்து
எழில்மலர் புரைதல் வேண்டும்,அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி, 10
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே; யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்வோ - பொலந்தார், 15
கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்,
வான வரம்பன் அடல்முனைக் கலங்கிய
உடைமதில் ஓர் அரண்போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework