சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்கண்ணியின் மலரும் தண்நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன
இருதிரி மருப்பின் அண்ணல் இரலை
செறிஇலைப் பதவின் செங்கோல் மென்குரல் 5
மறிஆடு மருங்கின் மடப்பிணை அருத்தித்,
தெள்அறல் தழீஇய வார்மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்;
செல்க, தேரே - நல்வலம் பெறுந!- 10
பசைகொல் மெல்விரல், பெருந்தோள், புலைத்தி
துறைவிட் டன்ன தூமயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற்,
செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி,
'இன்றுவரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, 15
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண்நலம் பெறவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework