கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்றமீன்முள் அன்ன, வெண்கால் மாமலர்
பொய்தல் மகளிர் விழவுஅணி கூட்டும்
அவ்வயல் தண்ணிய வளம்கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ - தோழி! - அல்கல் 5
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
இரும்புசெய் தொடியின் ஏர ஆகி,
'மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம்மற்று 10
இவை பாராட்டிய பருவமும் உளவே ; இனியே
புதல்வற் றடுத்த பாலொடு தடஇத்
திதலை அணிந்த தேம்கொள் மென்முலை
நறுஞ் சாந்து அணிந்த கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம்வேண் டினமே 15
தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி, மதவுநடைச்
செவிலி கைஎன் புதல்வனை நோக்கி,
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் ; இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம்' என, மெல்லஎன் 20
மகன் வயின் பெயர்தந் தேனே; அதுகண்டு
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்
சிறுபுறம் கவையின னாக, உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பலஉழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து, அவன் கலுழ்ந்தே .
நெஞ்சுஅறை போகிய அறிவி னேற்கே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework