கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்,வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அம்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
செய்படர் அன்ன செங்குழை அகந்தோறு,
இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் 5
உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாறித்,
துப்பின் அன்ன செங்கோட்டு இயவின்,
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்- 10
கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி, உரந்துரந்து,
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, 15
துனைபரி துரக்கும் துஞ்சா செலவின்
எம்மினும், விரைந்து வல்எய்திப் பல்மாண்
ஓங்கிய நல்லில் ஒரு சிறை நிலைஇ,
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி, 20
கைகவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி,
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ-
நாணொடு மிடைந்த கற்பின், வாணுதல்,
அம் தீம் கிளவிக் குறுமகள்
மென்தோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework