பன்னாள் எவ்வம் தீரப் பகல்வந்துபுன்னைஅம் பொதும்பின் இன்னிழற் கழிப்பி
மாலை மால்கொள நோக்கிப் பண்ஆய்ந்து
வலவன் வண்தேர் இயக்க நீயும்
செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம- 5
'செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்
பல்பூங் கானற் பவத்திரி அனவிவள்
நல்லெழில் இளநலம் தொலைய ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள்ளெயிற்று அரவொடு வயமீன் கொட்கும் 10
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது' என
நின்திறத்து அவலம் வீட இன்றிவண்
சேப்பின் எவனோ- பூக்கேழ் புலம்ப-
பசுமீன் நொடுத்த வெந்நெல் மாஅத்
தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே 15
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டிமிர் நறுஞ்சாந்து அணிகுவம்- திண்திமில்
எல்லுத்தொழின் மடுத்த வல்வினைப் பரதவர்
கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புடன் 20
கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு
முன்றில் தாழைத் தூங்கும்
தெண்கடற் பரப்பினெம் உறைவின் ஊர்க்கே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework