எல்லையும் இரவும் வினைவயின் பிரிந்த
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
எல்லையும் இரவும் வினைவயின் பிரிந்தமுன்னம், முன்உறுபு அடைய உள்ளிய
பதிமறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அதுமறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடுவளி எடுத்த கால்வழி தேக்கிலை 5
நெடுவிளிப் பருந்தின் வெறிஎழுந் தாங்கு,
விசும்புகண் புதையப் பாஅய்ப், பலஉடன்
அகல்இடம் செல்லுநர் அறிவுகெடத் தாஅய்க்,
கவலை சுரக்கும் காடுஅகல் அத்தம்,
செய்பொருள் மருங்கின் செலவுதனக்கு உரைத்தென 10
வைகுநிலை மதியம் போலப், பையெனப்,
புலம்புகொள் அவலமொடு, புதுக்கவின் இழந்த
நலம்கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
நீரொடு பொருத ஈர்இதழ் மழைக்கண்
இகுதரு தெண்பனி ஆகத்து உறைப்பக், 15
கால்நிலை செல்லாது, கழிபடர்க் கலங்கி,
நாநடுக் குற்ற நவிலாக் கிளவியொடு,
அறல்மருள் கூந்தலின் மறையினள், 'திறல் மாண்டு
திருந்துக மாதோ, நும்செலவு' என வெய்து உயிராப்,
பருவரல் எவ்வமொடு அழிந்த
பெருவிதுப் புறுவி பேதுறு நிலையே