அம்ம- வாழி தோழி!- பல்நாள்இவ்ஊர் அம்பல் எவனோ? வள்வார்
விசிபிணித்து யாத்த அரிகோல் தெண்கிணை
இன்குரல் அகவுநர் இரப்பின் நாடொறும்
பொன்கோட்டுச் செறித்துப், பொலந்தார் பூட்டிச், 5
சாந்தம் புதைத்த ஏந்துதுவங்கு எழிலிமில்
ஏறுமுந் துறுத்துச், சால்பதம் குவைஇ,
நெடுந்தேர் களிற்றொடு சுரக்கும் கொடும்பூண்
பல்வேல் முசுண்டை வேம்பி அன்னஎன்
நல்லெழில் இளநலம் தொலையினம், நல்கார்- 10
பல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத்,
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகுஆ வீழ்த்துத், திற்றி தின்ற
புலவுக்களம் துழைஇய துகள்வாய்க் கோடை
நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த 15
வாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து,
வேறுவேறு கவலைய ஆறுபரிந்து, அலறி,
உழைமான் இனநிரை ஓடும்
கழைமாய் பிறங்கல் மலைஇறந் தோரே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework